"காஸ்யப சில்ப சாத்திரம்', "சில்பரத்தினம்', "வாஸ்து வித்யை,' "பிருஹத் சம்ஹிதா' (குப்தர் காலம்), "விஷ்ணு தர்மேந்திர புராணம்', "சமரங்க சூத்ர தாரணம்' போன்ற வடமொழி நூல்களின்மூலம் வாஸ்து பற்றி அறியமுடிகிறது. சிலப்பதிகாரத்தில், "மயனால் செய்யப்பட்டது போன்ற ஏழடுக்கு மாளிகையில், நான்காம் அடுக்கில் மணிகள் இழைத்த கால்களையுடைய கட்டிலின்மேல் கண்ணகியும் கோவலனும் இருந்ததாக' இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.
வாஸ்துக் கடவுள் விஸ்வகர்மா பற்றி வில்லிபாரதத்திலும், சீவக சிந்தாமணியிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. மயன் அமைத்த மாளிகையில் பாண்டவர் வசித்ததையும், வெற்றிபெற்றதையும் மகாபாரதத்திலும்; வாஸ்துபற்றி லட்சுமணன் கூறுவதாக இராமாயணத்திலும் குறிப்புகள் உள்ளன. இதிலிருந்து வாஸ்துக் கலையின் பழமையை அறிந்துகொள்ளலாம்.
மனையடி சாஸ்திரத்தில், வீடுகட்ட மனை தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. நிலத்தின் வடிவம், அதன் உயிரோட்டம், மண்ணின் சுவை ஆகியவற்றைக் கணித்து வீடு கட்டுதல் நலம். உடுக்கை போன்ற நிலம், வேல், சூலம் போன்ற வட்டம், முக்கோணம், பாம்பு, பறவை, பல்லி, பன்றி வடிவங்களிலுள்ள மனைகளைத் தவிர்க்கவேண்டும். மனைகள் சதுரமாகவும், நீள்சதுரமாகவும் இருக்கவேண்டும்.
மண் சோதனைநிலத்தில் மாமிசவாடை இருந்தாலும், மேற்கும் தெற்கும் தாழ்ந்த பூமியாக இருந்தாலும் தவிர்க்கவேண்டும் என மனை நூல்கள் சொல்கின்றன. நிலத்தில் ஒருமுழ நீளம், ஒருமுழ அகலம், ஒருமுழ ஆழத்தில் குழிதோண்டி, அதிலிருந்து எடுக்கப்பட்ட மண்ணை மீண்டும் அந்தக் குழியில் கொட்டவேண்டும். மண் அதிகமாக மீதமிருந்தால் நல்லமனை; வீடுகட்ட உத்தம இடமாகும். கொட்டப்பட்ட மண் சரியாக இருந்தால் மத்திமம் ஆகும். லாபம்- நஷ்டம் இரண்டும் இருக்கும். மண்ணைக் கொட்டிய பின்னரும் பள்ளமாக இருந்தால் அதை அதம நிலம் என்பர். வீடுகட்ட ஏற்றதல்ல.
மண், நீர் சோதனை மனையில் ஒருமுழ நீளம், ஒருமுழ அகலம், ஒருமுழ ஆழத்திற்கு மாலை நேரத்தில் தோண்ட வேண்டும். பின்னர் அக்குழியில் நீரூற்ற வேண்டும். மறுநாள் சூரிய உதயத்தின்போது அக்குழியில் நீரிருந்தால், அம்மனையில் வசிப்பவர் குபேரனாக இருப்பார். லேசான ஈரமிருந்தால் லாபம்- நஷ்டம் இரண்டும் இருக்கும். மத்திமப் பலன் இருக்கும். காய்ந்து வெடித்திருந்தால் அம்மனையில் வீடுகட்டக்கூடாது. அதம நிலமாகும்.
மேற்கண்டவாறு குழியிட்டு, அக்குழியில் நீர்விட்டு, அதனைக் கூர்ந்து கவனிக்கவேண்டும். விடப்பட்ட நீர் வலம்புரியாகச் சுற்றினால் மிகுந்த செல்வம் சேரும். நீர்க்குமிழி தோன்றினால் விபத்து உண்டாகும். இடம்புரியாகச் சுற்றினால் நில அருள் இல்லை. அம்மனையில் வசிப்பவர் நிரம்பவும் சிரமப்படுவார். இதேபோன்று நீர்விட்டு மலரிட்டால், அம்மலரானது வானைப் பார்த்தவாறு வலம்புரியாகச் சுற்றினால், அம்மனையில் வசிப்பவர் அனைத்து செல்வங்களையும் பெற்று வாழ்வார். இடம்புரியாகச் சுற்றினால் அம்மனையில் வசிப்பவர் மரணமடைவார் என மனையடி சாஸ்திரங்கள் கூறுகின்றன.
மேற்கண்டவாறு நீர்விட்டு வலம்புரியாகச் சுற்றிய மலர்கள் இந்திரன் திசையான கிழக்கில் நின்றால், தனம், தானியம் உண்டு.
ஆயுள் விருத்தியாகும். புத்திரர்கள் கிடைக்கப்பெறுவர். அக்னி மூலையான தென்கிழக்கில் நின்றால் வீடு தீப்பிடிக்கும். நெருப்பினால் அழிவு ஏற்படும். எமன் திசையான தெற்கில் நின்றால் கலகம் உண்டாகும். தென்மேற்கு மூலையான கன்னி மூலையில் நின்றால், மிகுந்த செல்வம் சேரும். வருணன் திசையான மேற்கில் நின்றால் நினைத்தது நிறைவேறும். வாயுமூலையான வடமேற்கில் நின்றால் அழிவுண்டாகும். குபேரன் திசையான வடக்கில் நின்றால் செல்வம் சேரும்.
ஈசான்ய திசையான வடகிழக்கில் நின்றால் ஆயுள், புத்திர பாக்கியம் உண்டாகும். வாழ்வில் மேன்மேலும் வளர்ச்சி காண்பர்.
மேற்கண்டவாறு மண்பரிசோதனை செய்து பின்னர் வீடுகட்டவேண்டும். அப்போதுதான் நிம்மதியான உறக்கம், நிம்மதியான வாழ்க்கை அமையும். பூக்கள் இடப்புறமாகச் சுற்றினாலோ, மனையில் புற்றுகள் இருந்தாலோ தவிர்க்கவேண்டும். பொதுவாக புற்றுகள் கிழக்கு, தென்மேற்கு, மேற்கு, வடக்கில் இருந்தால் கெடுபலன்கள் இல்லை. மற்ற இடங்களில் எங்கிருந்தாலும் மனையில் வசிப்பவர்க்கு துன்பங்கள் ஏற்படும்.
நல்ல மனையைத் தேர்ந்தெடுக்கும் மேலும் சில விதிகளை அடுத்த இதழில் காண்போம்.
(தொடரும்)
செல்: 94434 80585